மாடு, குதிரை வண்டி பந்தயம்
கபிஸ்தலத்தில் மாடு, குதிரை வண்டி பந்தயம் நடந்தது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலத்தில் மாடு, குதிரை வண்டி பந்தயம் நடந்தது.
உற்சவ திருவிழா
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே கீழகபிஸ்தலம், ராமானுஜபுரம் ஊராட்சி மந்தகாரதெருவில் உள்ள அரியநாச்சியம்மன் கோவிலின் மதுஎடுப்பு மற்றும் சந்தன காப்பு உற்சவ திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு என மூன்று பிரிவாக நடத்தப்பட்டது. மாடுகள் பிரிவில் பந்தய தூரமானது 8 மைல் தூரம் என நிர்ணயிக்கப்பட்டது.
குதிரை வண்டி பந்தயம்
அதனைத் தொடர்ந்து நடந்த குதிரை வண்டி பந்தயத்தில் நடுக்குதிரை, சிறிய குதிரை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. குதிரைக்கு பந்தய தூரமாக 10 மைல் தூரம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த பந்தயங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க தொகை மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவ வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
பரிசு
முன்னதாக குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் செல்வபாண்டியர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயத்தினை கபிஸ்தலம் சாலையின் இரு ஓரங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரண்டிருந்து ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.