மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

கடையக்குடி அருகே மண்டலமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில், வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

புதுக்கோட்டை

கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடி அருகே உள்ள அம்மையாபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மண்டலமுடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்ய விழா கமிட்டியினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 1-ந் தேதி அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அதிகாலையிலிருந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 9.35 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை வேத விற்பன்னர்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். அதன் பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் விமான கோபுரத்தை அடைந்தது. காலை 9.25 மணியளவில் விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

இந்த விழாவில் அம்மையார்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, அரிமளம், கே.புதுப்பட்டி, அறந்தாங்கி, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில், வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை வழி நெடுகிலும் நின்று ஏராளமானோர் கண்டுகளித்தனர்.


Next Story