மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி
பொம்மணத்துபட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்த மாட்டிற்கு எலுமிச்சை பழம் வழங்கப்பட்டது.
திருவிழா
கரூர் மாவட்டம், ஜெகதாபி அருகே உள்ள பொம்மணத்துபட்டியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாரியம்மன் மற்றும் பொம்மதேவருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவில் திருவிழாவை நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதன்படி சாமி சாட்டுதல் நடத்தப்பட்டு 14 மந்தைகளை சேர்ந்த கிராம குட்டி பாட்டு மக்களுக்கு திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து திருவிழாவின் முதல் நிகழ்வாக ஊர் பொது கிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
சிறப்பு அபிஷேகம்
பின்னர் முத்தாலம்மன், மாரியம்மன், பொம்ம தேவருக்கு புனித நீர், இளநீர், பால், தயிர், சந்தனம், தேன் பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் கோவிலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு செய்தனர். நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கரூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு ஊர்களில் வசிக்கும் குடிபாட்டு மக்கள் இதற்காகவே வளர்க்கப்படும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாட்டு காளைமாடுகளை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தனர்.
2 கிலோ மீட்டர்
இதனையடுத்து அந்த மாடுகள் திருவிழாவிற்கு வந்ததற்கு அடையாளமாக சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அந்த மாடுகளை கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்து ஓட விடப்பட்டன. இதில் முதலாவதாக ஓடிவந்து வெற்றிபெற்ற மாட்டிற்கு கோவிலின் சிறப்பு பிரசாதமாக எலுமிச்சம் பழம் வழங்கப்பட்டது.