கரூர் அருகே மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி


கரூர் அருகே மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி
x

கரூர் அருகே மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

திருவிழா

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா காணியாளம்பட்டி அருகே உள்ள நத்தப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், எருதுகுட்டை கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதன்படி கடந்த 16- ந் தேதி சாமி சாட்டுதல் நடத்தப்பட்டு 14 மந்தைகளை சேர்ந்த கிராம குடி பாட்டு மக்களுக்கு திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

அபிஷேகம்

தொடர்ந்து நேற்று முன்தினம் திருவிழாவின் முதல் நிகழ்வாக ஊர் பொது கிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் புனித நீர், இளநீர், பால், தயிர், சந்தனம், தேன் பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு மாரியம்மனுக்கும், எருது குட்டை சாமிக்கும் அபிஷேகம் செய்து மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் கோவிலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு செய்தனர்.

மாடு மாைல தாண்டும் நிகழ்ச்சி

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக கரூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு ஊர்களில் வசிக்கும் குடிபாட்டு மக்கள் இதற்காகவே வளர்க்கப்படும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாட்டு காளைமாடுகளை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து அந்த மாடுகள் திருவிழாவிற்கு வந்ததற்கு அடையாளமாக சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அந்த மாடுகளை கோவிலில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து ஓட விடப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் அய்யாச்சீமை மந்தை மாடு முதலாவதாக ஓடிவந்து வெற்றி பெற்றது. அந்த மாட்டிற்கு கோவிலின் சிறப்பு பிரசாதமாக எலுமிச்சம் பழம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story