மாட்டுவண்டி பந்தயம்
மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 68 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன. இதில் பெரியமாடுகள் பிரிவில் 23 ஜோடிகளும், சிறிய மாடுகள் பிரிவில் 21 ஜோடிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 24 ஜோடிகளாகவும் போட்டிகள் நடைபெற்றன. பெரிய மாடுகள் சென்றுவர 7 மைல் எனவும், சின்ன மாடுகள் சென்றுவர 6 மைல் எனவும், பூஞ்சிட்டு மாடுகள் சென்றுவர 5 மைல் எனவும் பந்தய தூரம் நிர்ணயம் செய்து இருந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 பரிசுகள் வீதம் வழங்க ஏற்பாடு செய்து இருந்தனர். மாட்டுவண்டி போட்டியை அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், சாரதிகளுக்கும் மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, திருப்புவனம் யூனியன் சேர்மன் சின்னையா ஆகியோர் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் யூனியன் துணை தலைவர் மூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.மாட்டுவண்டி பந்தயத்தை வேடிக்கை பார்த்த திருப்புவனம் கோட்டையை சேர்ந்த தவமணி (வயது53) என்பவர் கீழே விழுந்து மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.