மாட்டுச்சந்தை அமைக்கும் பணி


மாட்டுச்சந்தை அமைக்கும் பணி
x
திருப்பூர்

மாட்டுச்சந்தை அமைக்கும் பணிமாட்டுச்சந்தை அமைக்கும் பணிமாட்டுச்சந்தை அமைக்கும் பணி

காங்கயம் நகரில் மாட்டுச்சந்தை அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மாட்டுச்சந்தை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரில் பஸ் நிலையம் அருகே உள்ள வாரச்சந்தை வளாகத்தில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு மாட்டுச் சந்தை நடைபெற்று வந்தது. அதன் பின்னர் இந்த சந்தை செயல்படவில்லை. இதையடுத்து மாடு வளர்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க காங்கயம் நகராட்சியில் மாட்டுச்சந்தை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் செயல்பட முடிவு செய்யப்பட்டது.

தற்போது காங்கயம் வாரச்சந்தை வளாகத்தில் தினசரி சந்தை, உழவர் சந்தை, சிறு மேடையுடன் கூடிய பொதுக்கூட்ட அரங்கம், பொது நூலகம், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகியன செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு சந்தைக்கான இடம் குறுகிய நிலையில் தற்போது இந்த வாரச்சந்தை வளாகத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், 300-க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கட்டப்பட்டு வருகின்றன.

ரூ.5 லட்சத்தில் பணிகள்

இதனால் காங்கயம் நகரில் மாட்டுச்சந்தை அமைப்பதற்கு காலியிடம் இல்லாததால் தாராபுரம் சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சக்தி நகர் பகுதியில் தனியாருக்குச்சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பில், ஓராண்டு வாடகையாக ரூ.3 லட்சம் செலுத்தி மாட்டுச்சந்தை வாரந்தோறும் செயல்பட உள்ளது. வரும் காலங்களில் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பாக ஓராண்டு முன்னோட்ட அடிப்படையில் செயல்படவுள்ள இந்த மாட்டுச் சந்தையில் தற்போது ரூ.5 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப்பணிகளை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன், காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story