சக்கம்பட்டி, தேனி பகுதிகளில் பசுமாடு, 7 கன்று குட்டிகள் திருட்டு
சக்கம்பட்டி, தேனி பகுதிகளில் பசுமாடு, 7 கன்றுகள் குட்டிகள் திருடுபோனது.
சக்கம்பட்டி அருகே உள்ள சீதாராம்தாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 36). இவர், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி இரவு கொட்டகையில் மாடுகளை கட்டிவைத்துவிட்டு, வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கு கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஒரு பசுமாடு, 2 கன்று குட்டிகளை திருடி சென்றனர்.
இதற்கிடையே மறுநாள் தோட்டத்திற்கு வந்த ஜெயபிரகாஷ், பசு மற்றும் கன்று குட்டிகள் திருடுபோனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தேனி அருகே மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 41). இவர் ஆதிப்பட்டியில் மாட்டுக்கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இந்த மாட்டுக்கொட்டகையில் கட்டி வைத்து இருந்த 5 கன்று குட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மகேந்திரன் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்றுகுட்டிகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.