மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று உடல் புதைப்பு
மதுபோதையில் தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொலை செய்து உடலை புதைத்த மற்றொரு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொலை
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி மேலத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 48). இவர் தனது மாமனார் வீடான கீழவிளாங்குடியில் தங்கி மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரும், ஆதிச்சனூர் மேலத்தெருவை சேர்ந்த மாடு மேய்க்கும் தொழிலாளியான வெங்கடாசலம்(50) என்பவரும் கீழவிளாங்குடி அய்யனார் கோவில் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
பின்னர் மது போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அறிவழகன் போதையில், வெங்கடாசலத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடாசலம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து செய்வதறியாது திகைத்த அறிவழகன், வெங்கடாசலத்தின் உடலை அங்கேயே புதைத்துவிட்டு, அந்த இடத்தில் விறகுகளை அடுக்கி வைத்துள்ளார். பின்னர் போதையில் நடந்ததை அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சாலை மறியல்
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து உடல் புதைக்கப்பட்டிருந்ததால் இதுகுறித்து அரியலூர் தாசில்தார் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் முன்னிலையில், புதைக்கப்பட்டிருந்த வெங்கடாசலத்தின் உடலை போலீசார் தோண்டி எடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே வெங்கடாசலத்தின் உறவினர்கள் இழப்பீடு கேட்டு கீழ விளாங்குடி- தா.பழூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அறிவழகனை போலீசார் கைது செய்து அவரிடம், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.