பசு-காளை மாடுகளுக்கு பூஜை செய்து ஓட்டி செல்லும் நிகழ்வு
பசு-காளை மாடுகளுக்கு பூஜை செய்து ஓட்டி செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி பசு மாடுகள், காளை மாடுகளை பூஜை செய்து ஓட்டி செல்லும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காணும் பொங்கலையொட்டி சத்திரமனை கிராமத்தில் ஏற்கனவே நேற்று முன்தினம் மாட்டு பொங்கலன்று பூஜை செய்து தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசு மாடுகள், காளை மாடுகள் மீண்டும் அலங்கரிக்கப்பட்டு அவிழ்த்து கொண்டு மாரியம்மன் கோவில் அருகே சந்தியாருக்கு மாலை 6 மணியளவில் விவசாயிகள், கால் நடை வளர்ப்போர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் சந்தியாரில் பசு மாடுகள், காளை மாடுகளுக்கு தெய்வ வழிபாடு நடத்தி, பூஜை செய்து 3 முறை சுற்றி வந்து மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றனர். இந்த நிகழ்வால் பசு மாடுகள், காளை மாடுகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழும் என்பது விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்களின் ஐதீகம். இந்த நிகழ்வை சத்திரமனை கிராம மக்கள் மற்றும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர். முன்னதாக சத்திரமனை கிராமத்தில் காலையில் விளையாட்டு போட்டிகளும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடந்தது குறிப்பிடத்தக்கது.