விஷம் கலந்த உணவை தின்ற பசுமாடு, காட்டுப்பன்றி சாவு


விஷம் கலந்த உணவை தின்ற பசுமாடு, காட்டுப்பன்றி சாவு
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 8:03 PM IST)
t-max-icont-min-icon

செண்பகராமன்புதூர் அருகே விஷம் கலந்த உணவை தின்ற பசுமாடு, காட்டுப்பன்றி பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

செண்பகராமன்புதூர் அருகே விஷம் கலந்த உணவை தின்ற பசுமாடு, காட்டுப்பன்றி பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடு, பன்றி சாவு

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணி குமார். இவருடைய மகன் சங்கர நாராயணன் (வயது 24). இவர் தனியார் நிதிநிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் 6 பசுமாடுகள் வளர்த்து வருகிறார். மாடுகளை கீழபத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் அங்கு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். பின்னர் மாலையில் சென்று பார்த்த போது பசு மாடு ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதன் அருகில் காட்டுப்பன்றி ஒன்றும் இறந்து கிடந்தது. அப்போது அவர் வயல்வெளியை சுற்றி பார்த்தபோது அங்கு ஒரு இடத்தில் விஷம் கலந்த உணவு தரையில் கொட்டப்பட்டு கிடந்தது.

விஷம் கலந்த உணவு

இதுகுறித்து ஆரல்வாய்மொழி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரகர் ரவீந்திரன் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த காட்டுப்பன்றியை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டது. மேலும் விஷம் சோதனைக்காக நெல்லை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாட்டை சம்பவம் நடந்த அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

வேட்டையாட வைக்கப்பட்டதா?

மேலும் இதுபற்றி சங்கர நாராயணன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து வனவிலங்குகளை வேட்டையாடும் வகையில் விஷம் வைக்கப்பட்டதா? அல்லது முன்விரோதம் காரணமாக பசு மாட்டை கொல்ல விஷம் வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசாரும், வனத்துறையினரும் தனித்தனியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story