மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி


மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி
x

வெள்ளியணை அருகே 7 ஆண்டுகளுக்கு பிறகு மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

கோவில் திருவிழா

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள பாகநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான நீலமேகப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த திருவிழா 3 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது நிலவிய கொரோனா பெருந்தெற்று காரணமாக இத்திருவிழா நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இதனால் இந்த திருவிழா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புதான் நடைபெற்றது. மேலும் இத்திருவிழாவின் போது மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சியும் நடத்தப்படும். தற்போது கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு திருவிழாவை நடத்த குடிப்பாட்டு மக்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து கம்பம் நடுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வந்து வழிபாடு செய்தல், நேர்த்தி கடன் செய்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 250-க்கும் மேற்பட்ட நாட்டு இன காளை மாடுகளை கரூர் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை கோவிலில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்து ஓட விடப்பட்டன. இதில் முதலாவதாக ஓடிவந்து வெற்றிபெற்ற மாட்டிற்கு கோவிலின் சிறப்பு பிரசாதமாக எலுமிச்சைப்பழம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்க்காட்டு நாயக்கனூர், புளியம்பட்டி, கள்ளிப்பட்டி, பட்டாச்சிபாளையம், கோலார்பட்டி, மாவத்தூர், தொட்டியபட்டி, பாகநத்தம் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story