மாடுகளுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும்; கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தல்


மாடுகளுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும்; கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாடுகளுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தி உள்ளார்.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாடுகளில் பெரியம்மை நோய் என்பது ஈ, கொசு போன்ற ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும். பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், உடல் முழுவதும் சிறிய கட்டிகள், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். உண்ணி, கொசு போன்ற கடிக்கும் ஈக்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்தும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து புதிதாக மாடுகள் வாங்கி வருவதன் மூலமாகவும் நல்ல ஆரோக்கியமான மாடுகளுக்கும் நோய் பரவுகிறது.

நோயுற்ற மாடுகளில் கடுமையான காய்ச்சல், உடல் சோர்வு, தீவனம் உண்ணாமை, கண்ணில் நீர் வடிதல், உடலின் அனைத்து பகுதிகளிலும் கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் காணப்படும். கன்றுகளில் நோயின் வீரியம் அதிகமாக காணப்படும். கறவை மாடுகளின் மடி மற்றும் காம்புகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு சில சமயம் மடி நோயாக மாறும் இயல்புடையது. கறவை மாடுகளில் பால் உற்பத்தி வெகுவாக குறையும். மேற்கூறிய நோய் அறிகுறிகள் கால்நடைகளில் தென்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story