கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் சி.பா.ஆதித்தனார்வி. ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் சி.பா.ஆதித்தனார் என வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.
வெற்றி நிச்சயம்
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்த வெற்றி நிச்சயம் நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் முன்னிலை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தினத்தந்தி 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1950-ம் ஆண்டில் இருந்து நான் தினத்தந்தியை படித்து வருகிறேன். சிலரை தினத்தந்தி பைத்தியம் என்பார்கள். எனக்கு தினமும் 9 செய்தி தாள்கள் வருகின்றன. இதில் 5 தமிழ் செய்தித்தாள்கள், 4 ஆங்கில செய்தித்தாள்களாகும். இதில் முதலில் தேடி எடுத்து படிப்பது தினத்தந்தி தான். தினத்தந்தியின் நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் லயோலா கல்லூரியில் மாணவனாக இருந்த போது அவரை கல்லூரியில் பேச அழைப்பதற்காக தினத்தந்தி அலுவலகம் சென்றேன். அங்கு அவர் என்னை மாணவனாக பாவிக்கவில்லை. அவருக்கு சமமாக என்னை நடத்தினார். அது எனக்கு வியப்பை தந்தது.
கூட்டுறவுத்துறை அமைச்சர்
பின்னர் நான் வக்கீல் ஆனேன். 1967-ம் ஆண்டு நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கி, சட்டமன்ற உறுப்பினராகி சி.பா. ஆதித்தனார் சபாநாயகர் ஆனார். நான் 1968-ல் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனேன். பின்னர் அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கலைஞர் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். கூட்டுறவுத் துறையில் உள்ள சங்கங்களில் அப்போது காங்கிரசார் தான் அதிகமாக பதவியில் இருந்தனர். அந்த பதவிகளுக்கு தி.மு.க.வினர் எப்படி வரவேண்டும் என்பதை சிந்தித்து வழிகாட்டியவர் சி.பா.ஆதித்தனார் தான். அப்போது அவருடன் மிகவும் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் வசதியானவர். சிங்கப்பூரில் பாரிஸ்டர் பட்டம் பெற்று வக்கீலாக பணியாற்றினார்.
என்றாலும் ஏழை மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்கு பிறகு அவரது மகன் சிவந்தி ஆதித்தன், தற்போது அவருடைய பேரனும் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். அடுத்த தலைமுறையும் நிர்வாகத்துக்கு வந்து விட்டது.
மாணவர்களுக்கு நம்பிக்கை
மாணவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நாங்கள் அந்த காலத்தில் படிக்கும்போது எந்த படிப்பில் சேர வேண்டும் என அப்போது வழிகாட்டுவதற்கு ஆள் இல்லை. 1950-ல் அந்த நிலைமை. இப்போது வழிகாட்டுவதற்கு பலர் உள்ளனர்.
கல்விக்கு அதிக முக்கியத்துவம்
உயர்கல்வியில் நாம் அக்கறை செலுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு அனைவருக்கும் உயர்கல்வி என்ற திட்டம் தொடங்கப்பட்டு வசதி இல்லாத மாணவர்கள் உயர்கல்வி படிக்க வழிவகை செய்து வருகிறோம். இதுவரை 6,800 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 67 சதவீதம் மாணவிகள். உதவித் தொகையில் 50 சதவீதத்தை வி.ஐ.டி. பல்கலைக்கழகம் கொடுக்கிறது.
வேலூர் மாவட்டம் இந்தியாவில் முன்மாதிரி மாவட்டமாக திகழ்கிறது. அரசு உதவி இல்லாமல் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கல்வியை உயர்த்த வி.ஐ.டி. பாடுபட்டு வருகிறது. அதுபோல கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் சி.பா.ஆதித்தனார். அவர் காலத்தில் இருந்து தற்போது வரை அதனை செய்து கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜி.வி.செல்வம்
நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:-
வி.ஐ.டி.யும், தினத்தந்தியும் பல ஆண்டுகளாக வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகின்றன. சமுதாயம் மலர வேண்டும், அடுத்த தலைமுறை நன்றாக வளர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை எவ்வாறு தமிழ் கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டால் தினத்தந்தியை படித்தேன். தமிழ் கற்றுக் கொண்டேன் என்பார்கள். நம்பகத்தன்மையான செய்திகளுக்கு தினத்தந்தி தான்.
ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
கொரோனாவுக்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது. கொரோனா காலத்தில் பல உயிரிழப்புகளை நாம் பார்த்துள்ளோம்.
மாணவர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்ற மாணவர்களுடன் ஒப்பீடு செய்து பேசக்கூடாது.
மாணவர்களுக்கு எதில் ஆர்வம் என்பதை ஆசிரியர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு கண்டுபிடித்து நீங்கள் அந்த படிப்பை எடுத்து படிக்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் கூறுகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் மாணவர்கள் தான் தங்கள் படிப்பை பற்றி முடிவு செய்கிறார்கள்.
வி.ஐ.டி.யில் உள்ள பி.எஸ்.சி. அக்ரி (வேளாண்மை) படிப்பு படிக்க நிறைய மாணவர்கள் போட்டி போடுகிறார்கள். காரணம் இந்த படிப்பு படிப்பவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.க்கு போட்டி தேர்வுகளை எழுதுகிறார்கள்.
நீங்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே செல்லும் போது ஏதாவது ஒரு கருத்தை எடுத்து சென்றால் போதும். அது உங்களின் வாழ்க்கையை மாற்றும்.
வெற்றிக்கு துணிச்சல் தேவை
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு துணிச்சல் தேவை. தோல்விக்கு தயக்கம் தான் காரணம். கடின உழைப்பும், உண்மையும் இருந்தால் அனைத்தும் உங்களை வந்து சேரும்.
இவ்வாறு அவர் பேசினார்.