கைதான 11 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


கைதான 11 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கில் கைதான 11 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந்தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததில் 14 பேர் இறந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், இவர்களுக்கு மெத்தனால் சப்ளை செய்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, தனியார் கெமிக்கல் ஆலை உரிமையாளரான சென்னை திருவேற்காடு இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம்குமார், வானூர் பெரம்பையை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி ஆகிய 11 பேர் மீது மரக்காணம் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைதான 11 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

11 பேர் ஆஜர்

இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் கைதான 11 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இ்ந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட நீதிபதி புஷ்பராணி, கைதான 11 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்படியும், விசாரணை முடிந்து மீண்டும் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

துருவிதுருவி விசாரணை

இதையடுத்து அவர்கள் 11 பேரையும் விழுப்புரம் கோர்ட்டில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு அழைத்துச்சென்றனர். பின்னர் கைதான 11 பேரையும் தனித்தனி அறைகளில் வைத்து ஒவ்வொருவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர்களிடம் எத்தனை நாட்களாக இதுபோன்று மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை விற்பனை செய்து வந்தீர்கள்? எக்கியார்குப்பத்தில் மட்டும் விற்பனை செய்தீர்களா? அல்லது வேறு ஏதேனும் பக்கத்து கிராமங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்தீர்களா? சாராயத்துடன் கலப்பதற்காக மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? சென்னையில் உள்ள இளையநம்பிக்கு சொந்தமான கெமிக்கல் தொழிற்சாலையில் இருந்து மட்டும்தான் மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டதா?, அரசியல் கட்சி பிரமுகர்கள் யாருக்காவது இதில் தொடர்பு இருக்கிறதா? என்று அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story