கைதான 8 பேரை 3 நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


கைதான 8 பேரை 3 நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x

அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான 8 பேரை 3 நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தின் மீது பல்வேறு சர்ச்சையான புகார்கள் எழுந்தன. இந்த புகாரை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் பிஜூமோன், பணியாளர்களான அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி, பூபாலன், சதீஷ், தாஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் தாஸ் மட்டும் வயதுமுதிர்வின் காரணமாக ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு, அவர்கள் விசாரணையை தொடங்கினர். மேலும் கைதானவர்களில் தாசை தவிர மற்ற 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க 3 நாட்கள் அனுமதி கேட்டு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் வைத்தியநாதன் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

8 பேர் ஆஜர்

இந்த மனு நேற்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அப்போது கைதான அவர்களில் ஜூபின்பேபியின் வலது கையில் கட்டுப்போடப்பட்டிருந்ததை பார்த்த நீதிபதி புஷ்பராணி, ஜூபின்பேபியிடம் எதனால் கட்டு போட்டு உள்ளீர்கள், ஏதேனும் காயமா? என்று கேட்டார். அதற்கு ஜூபின்பேபி, குரங்கு தன்னை கடித்ததால் ஏற்பட்ட காயம் என்றார். அப்போது உண்மையிலேயே குரங்கு கடித்ததால்தான் காயம் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் அடித்ததால் ஏற்பட்ட காயமா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு உண்மையிலேயே குரங்கு கடித்ததால்தான் காயம் ஏற்பட்டதாக ஜூபின்பேபி கூறினார்.

மருத்துவ சான்றிதழ் சமர்பிப்பு

மேலும் இந்த காயம், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக ஏற்பட்டதா? அல்லது அதற்குப்பிறகு ஏற்பட்டதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாகவே காயம் ஏற்பட்டதாக ஜூபின்பேபி கூறினார். இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி ஆஜராகி, ஜூபின்பேபிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த டாக்டரின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தார்.

இதையடுத்து ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி புஷ்பராணி அனுமதி வழங்கினார். மேலும் இந்த விசாரணை முடிந்து மீண்டும் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்குள் 8 பேரையும் தற்போதைய நிலையிலேயே கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார்.

காவலில் எடுத்து விசாரணை

இதையடுத்து அவர்கள் 8 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், காவலில் எடுத்து விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் இதுவரை ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? வெளிமாநிலங்களுக்கு எத்தனை பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்? ஆசிரமத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர் மாயமாகி உள்ளனர்? மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்கள் யாரேனும் ஆசிரமத்தில் இருந்து தப்பிக்கச்சென்று இறந்துள்ளனரா? என்பன போன்ற இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வரலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.


Next Story