முனியூர் வாய்க்கால் மதகில் விரிசல்; வெண்ணாற்றில் உடைப்பு ஏற்படும் அபாயம்


முனியூர் வாய்க்கால் மதகில் விரிசல்;  வெண்ணாற்றில் உடைப்பு ஏற்படும் அபாயம்
x

இரும்புதலை அருகே முனியூர் வாய்க்கால் மதகில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வெண்ணாற்றில் உடைப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

தஞ்சாவூர்

மெலட்டூர்:-

இரும்புதலை அருகே முனியூர் வாய்க்கால் மதகில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வெண்ணாற்றில் உடைப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

முனியூர் வாய்க்கால்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, இரும்புதலை அருகே தென்னஞ்சோலை பகுதியில் வெண்ணாற்றில் முனியூர் வாய்க்கால் தலைப்பு உள்ளது. இங்கு வெண்ணாற்றில் அமைக்கப்பட்டுள்ள முனியூர் வாய்க்கால் மதகில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் மதகு வலுவிழந்து காணப்படுகிறது. பருவமழை காலங்களில் வெண்ணாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றால் முனியூர் வாய்க்கால் மதகு உடைந்து வெண்ணாற்றில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அப்போது ஆற்றின் தண்ணீர் தென்னஞ்சோலை கிராமத்துக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

எனவே பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆற்றில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

தென்னஞ்சோலை பகுதியில் முனியூர் வாய்க்கால் தலைப்பு அருகே வெண்ணாற்றில் நடப்பு ஆண்டு ரூ.8 கோடி மதிப்பில் படுக்கை அணை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் முனியூர் வாய்க்கால் மதகில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. படுக்கை அணையில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டால் முனியூர் வாய்க்கால் மதகு உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.

முனியூர் வாய்க்கால் பாசனத்திற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து படுக்கை அணை கட்டியுள்ளனர். ஆனால் பழுதடைந்த முனியூர் வாய்க்கால் மதகை புதுப்பிக்கவில்லை. எனவே உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story