குண்டும்,குழியுமான தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்
குண்டும்,குழியுமான தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்
முத்தூர்
முத்தூர் அருகே வரட்டுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து மேட்டுக்காட்டுவலசு செல்லும் குண்டும், குழியுமாக பழுதடைந்து கிடக்கும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பழுதடைந்த தார்ச்சாலை
திருப்பூர் மாவட்டம் முத்தூர்- காங்கயம் சாலை வரட்டுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து மேட்டுக்காட்டுவலசு வரை செல்வதற்கு ஒரு தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தார்ச்சாலை கடந்த காலங்களில் பெய்த மழை நீரால் மற்றும் மிகவும் அதிக கனரக வாகன போக்குவரத்து காரணமாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக பழுதடைந்து பல்லாங்குழி சாலையாக மாறி காட்சி அளிக்கிறது.
மேலும் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு ஆட்டோ, டிராக்டர் உட்பட கனரக வாகனங்களில் இந்த தார்ச்சாலையை கடந்து கொண்டு சென்று விற்று பயன் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலையை பகல் மற்றும் இரவு நேரங்களில் எதிரெதிரே கடந்து செல்லும் இருசக்கர, கனரக வாகனங்கள் விபத்துக்கள் ஏற்பட்டு விடும் அபாயத்தில் சென்று வருகின்றன.
மேலும் இந்த தார்ச்சாலையை கடந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பள்ளி. கல்லூரி மாணவ -மாணவிகள், அரசு ஊழியர்கள் வர்த்தகர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான இந்த சாலையில் வாகனங்களை ஓட்ட முடியாமல் அடிக்கடி சிறு, சிறு விபத்துகளில் சிக்கி அல்லல்படுகின்றனர். இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனும், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் சென்று வருகின்றனர்.
துரித நடவடிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மூலம் உரிய நிதி ஒதுக்கீடு செய்து வரட்டுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து மேட்டுக்காட்டுவலசு வரை செல்லும் இந்த பழுதடைந்து உள்ள குண்டும், குழியுமான பல்லாங்குழி தார்ச்சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.