மலை பகுதியில் புதிதாக கட்டிய 2 பாலங்களில் விரிசல்


மலை பகுதியில் புதிதாக கட்டிய 2 பாலங்களில் விரிசல்
x

பேச்சிப்பாறை அருகே மலை பகுதியில் புதிதாக கட்டிய 2 பாலங்களில் விரிசல் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையின் நீர்பிடிப்பு மேல் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மோதிரமலை, மாங்காமலை, தச்சமலை, தோட்டமலை உள்பட பல்வேறு பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இங்கு படிப்படியாக அடிப்படை வசதிகள் தமிழக அரசால் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி இந்த பகுதிகளை ஒட்டியுள்ள ரப்பர் கழக குடியிருப்பு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.

2 பாலங்கள்

பேச்சிப்பாறை அருகே உள்ள மோதிரமலையில் இருந்து குற்றியாறு, கல்லாறு வழியாக தச்சமலைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த 2019-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டு தலா ரூ.28 லட்சம் செலவில் 2 உயர் மட்டப்பாலங்கள் கட்டப்பட்டன. இந்த பாலங்கள் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பேச்சிப்பாறை ஊராட்சி மூலம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2020-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.

இதில் ஒரு பாலம் மோதிரமலை-குற்றியாறு இடையே கோதையாறு மின் நிலையத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி வரும் நீலத்தோடு பகுதியிலும் மற்றொரு பாலம் குற்றியாறு-தச்சமலையை இடையே கல்லாற்றின் குறுக்கேயும் கட்டப்பட்டுள்ளது.

அதிக பாரத்துடன் செல்லும் லாரிகள்

தற்போது இந்த பாலங்கள் வழியாக அதிக பாரத்துடன் ரப்பர் மரத்தடிகளை ஏற்றிக் கொண்டு லாரிகள் தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளன. இதனால், இந்த பாலங்களுக்கும், சாலைக்குமான இணைப்புப் பகுதி சேதமடைந்து புதைந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கல்லாறு பாலத்தின் கீழ் பகுதியில் விரிசல் விழுந்துள்ளது. பாலம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் சேதமடைந்து வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மலை வாழ்மக்கள் மற்றும் ரப்பர் கழகத் தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ரெகுகாணி கூறியதாவது:-

மோதிரமலை-தச்சமலை இடையே உயர் மட்டப் பாலங்கள் கட்ட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு நீலத்தோடு மற்றும் கல்லாற்றில் 2 பாலங்கள் கட்டப்பட்டன. இந்தப் பாலங்கள் கட்டும் போதே உரிய தரத்துடன் கட்டவில்லை என புகார் தெரிவித்து வந்தோம். ஆனால் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இந்த பாலங்களின் இணைப்புப் பகுதிகளில் விரிசல் மற்றும் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. வரும் நாட்களில் வடகிழக்குப் பருவ மழை பெய்யவிருக்கும் நிலையில் போர்க்கால அடிப்படையில் இந்த உடைப்புகளை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீரமைக்க வேண்டும்

குற்றியாறைச் சேர்ந்த முத்துராம் கூறியதாவது:- மோதிரமலை-தச்சமலை இடையே உயர் மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கனவாகவும், கோரிக்கையாகவும் இருந்து வந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு உயர் மட்டப் பாலங்கள் கட்டப்பட்டது. ஆனால் பாலங்கள் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் பாலப் பகுதிகள் சேதமடைந்து வருவது வேதனை அளிக்கிறது. எனவே உடைப்புகளை உடனே தரமாக சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story