மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கிரேன் ஆபரேட்டர் கைது
மயிலாடுதுறை அருகே குழந்தையின் முதல் பிறந்த நாளில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
மணல்மேடு:
மயிலாடுதுறை அருகே குழந்தையின் முதல் பிறந்த நாளில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
கிரேன் ஆபரேட்டர்
மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேட்டை அடுத்து புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் கொற்கையை சேர்ந்த கீர்த்திகா(28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் கமலேஸ்வரி, 1 வயதில் மகிழினி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
குழந்தையின் முதல் பிறந்தநாள்
கலைவாணன் மற்றும் அவரது அண்ணன் தமிழ்வாணன் ஆகிய இருவரது குடும்பத்தினரும் ஒரே வீட்டில் குடியிருந்து வருகின்றனர். குவைத்தில் இருந்து கடந்த மே மாதம் 30-ந் தேதி அன்று கலைவாணன் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று கலைவாணனின் இரண்டாவது குழந்தை மகிழினிக்கு முதல் பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில் கலைவாணன் குவைத்தில் இருந்து தான் அனுப்பிய பணத்திற்கு தனது மனைவி கீர்த்திகாவிடம் கணக்கு கேட்டதாகவும் இது தொடர்பாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கழுத்து அறுபட்ட நிலையில்...
இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென கலைவாணன் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த தமிழ்வாணன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் ஓடிச்சென்று கலைவாணன் அறையின் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
உடனே அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அங்கே கண்ட காட்சியால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அறைக்குள் கீர்த்திகா கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
தப்பியோட்டம்
தமிழ்வாணன் மீண்டும் கதவை தட்டியபோது கதவை திறந்து அறைக்குள் இருந்து வெளியே வந்த கலைவாணன் அங்கே நின்று கொண்டு இருந்த தமிழ்வாணன் மனைவியின் மீது அரிவாளால் வீசி உள்ளார். இதில் ஜெயந்திக்கு கழுத்துப் பகுதியில் அரிவாளால் கீறல் விழுந்தது. பின்னர் இருவரையும் அரிவாளை காட்டி மிரட்டி அருகில் வந்தால் வெட்டிக்கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இந்த களேபரத்தால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். உடனே கலைவாணன் தனது கையில் வைத்திருந்த அரிவாளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
பரிதாப சாவு
பின்னர் அக்கம், பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த கீர்த்திகாவை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீர்த்திகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கழுத்தில் காயம் அடைந்த தமிழ்வாணன் மனைவி ஜெயந்தி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கைது
இந்த கொலை சம்பவம் குறித்து கீர்த்திகாவின் தந்தை மகேந்திரன் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செங்குட்டுவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைவாணனை கைது செய்தனர்.
குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாட வேண்டிய நாளில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோகம்
தாயை இழந்து, தந்தையும் கைதான நிலையில் ஆதரவற்று பரிதவிக்கும் இரண்டு பெண் குழந்தைகளை நினைத்து அந்த கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.