வீதிகளில் கம்பீரமாக வலம் வந்து, கம்பம் நகர மக்களை கதிகலங்க வைத்தது:அடர்ந்த வனத்துக்குள் செல்லாமல் அடம்பிடித்த 'அரிக்கொம்பன்' யானை சிக்கியது


வீதிகளில் கம்பீரமாக வலம் வந்து, கம்பம் நகர மக்களை கதிகலங்க வைத்தது:அடர்ந்த வனத்துக்குள் செல்லாமல் அடம்பிடித்த அரிக்கொம்பன் யானை சிக்கியது
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீதிகளில் கம்பீரமாக வலம் வந்து, கம்பம் நகர மக்களை கதிகலங்க வைத்த ‘அரிக்கொம்பன்' யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

தேனி

'அரிக்கொம்பன்' காட்டுயானை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உலா வந்த காட்டு யானை ஒன்றை 'அரிக்கொம்பன்' என்று பெயரிட்டு அப்பகுதி மக்கள் அழைத்தனர்.

'அரி' என்றால், மலையாளத்தில் 'அரிசி' என்று பொருள். சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதிகளில் அந்த யானை சுற்றித்திரிந்த காலத்தில் ரேஷன்கடைகளை குறி வைத்து, அதனை உடைத்து அங்கிருந்த அரிசியை ருசித்து தின்று வந்தது.

அரிசியை விரும்பி சாப்பிட்டதால், இந்த யானைக்கு 'அரிக்கொம்பன்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தமிழகத்தில், இந்த யானை 'அரிசிக்கொம்பன்' என்று அழைக்கப்படுகிறது.

ஹைவேவிஸ் மலையில் தஞ்சம்

இடுக்கி மாவட்ட மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்த அரிக்கொம்பன் யானையை, கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானை, தமிழக-கேரள எல்லையில் பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.

அந்த யானை அங்கிருந்து இடம் பெயர்ந்து தமிழக வனப்பகுதியான வண்ணாத்திப்பாறை வழியாக, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தது.

அங்கு உலா வந்த அந்த யானை கடந்த மாதம் 26-ந் தேதி நள்ளிரவில் குமுளி ரோசாப்பூ கண்டம் பகுதிக்கு சென்றது. அங்கு சிலர், அந்த யானையை தமிழக பகுதிக்கு துரத்தியதாக கூறப்படுகிறது.

கதிகலங்கிய மக்கள்

கடந்த 27-ந்தேதி அதிகாலையில் அந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்தது. கம்பம் நகரில் உள்ள தெருக்களில் யானை கம்பீரமாக வலம் வந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அந்த யானை ஓடும் போது அந்த வழியாக சென்ற அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அதிர்ச்சியில் கீழே விழுந்து காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே கம்பம் நகரில் இருந்து இடம் பெயர்ந்த அரிக்கொம்பன் யானை சுருளிப்பட்டி வழியாக மலையடிவார பகுதிக்கு சென்றது. பொதுமக்களை கதிகலங்க வைத்த அந்த யானையை பிடிக்க கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

அடம்பிடித்த யானை

இதேபோல் ஆனைமலை, டாப்சிலிப் பகுதிகளில் இருந்து 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. யானைகளின் குணாதிசயங்களை நன்கு அறிந்த பழங்குடியினர் சிறப்பு குழுவினரும் முதுமலையில் இருந்து வந்தனர். வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் யானை இருந்தது.

ஊருக்குள் வர விடாமல் யானையை தடுக்கவும், அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தவும் தொடர்ந்து வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அரிக்கொம்பன் யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் அடம் பிடித்து மலையடிவார பகுதி வழியாக உலா வந்தது.

சுருளிப்பட்டி பகுதியில் இருந்து நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி வழியாக சண்முகாநதி அணை பகுதிக்கு வந்தது.

மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

கடந்த சில நாட்களாக சண்முகாநதி அணை பகுதியில் உலா வந்த அரிக்கொம்பன் யானை, நேற்று முன்தினம் நள்ளிரவில் சின்னஓவுலாபுரம் பகுதிக்கு வந்தது. அங்கு சமதளமான பகுதி என்பதால், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி சின்னஓவுலாபுரம் பெருமாள்மலை கோவில் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிதுநேரத்தில் அந்த யானை அருகே இருந்த தனியார் தோட்டத்துக்குள் புகுந்தது.

இதைத்தொடர்ந்து கம்பத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுயம்பு, அரிசிராஜா என்ற முத்து ஆகிய 2 கும்கி யானைகளும் அங்கு வரவழைக்கப்பட்டன. உதயன் என்ற கும்கி யானையும் அங்கு வந்தது. அரை மயக்கத்தில் இருந்த அரிக்கொம்பன் யானையை, நேற்று அதிகாலையில் 3 கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

வேடிக்கை பார்த்த மக்கள்

இதைத்தொடர்ந்து அந்த யானை, 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வனத்துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனமான பிரத்யேக லாரியில் ஏற்றப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அரிக்கொம்பன் யானையுடன் லாரி புறப்பட்டது. லாரியின் முன்பும், பின்னாலும் கார், ஜீப்களில் வனத்துறையினர் மற்றும் போலீசார் அணிவகுத்து சென்றனர்.

சின்னஓவுலாபுரம், ஆணைமலையான்பட்டி, கோகிலாபுரம் வழியாக உத்தமபாளையம் புறவழிச்சாலைக்கு வந்தது. அங்கிருந்து சின்னமனூர், வீரபாண்டி, தேனி, ஆண்டிப்பட்டி வழியாக தேனி மாவட்ட எல்லையை யானையை ஏற்றி சென்ற லாரி கடந்து சென்றது. யானை சென்ற வழியெங்கும் மக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.

மேலும் பலர் தங்களது செல்போனில் ஆர்வத்துடன் புகைப்படமும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து அந்த யானை, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

144 தடை நீக்கம்

10 நாட்களாக மக்களை பீதி அடைய செய்த அரிக்கொம்பன் காட்டுயானை நேற்று தேனி மாவட்டத்தில் இருந்து மயக்க ஊசி செலுத்தி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் பீதியில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.

யானையை பிடிக்கும் பணி காரணமாக கம்பம், கூடலூர் நகராட்சிகள், கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகள், க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

யானை பிடிக்கப்பட்டதன் எதிரொலியாக, நேற்று காலையில் இருந்து 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.

==============

சுற்றுச்சூழல் தினத்தில் பிடிபட்ட யானை

ஜூன் 5-ந்தேதியான நேற்று, உலக சுற்றுச்சூழல் தினம் ஆகும். ஒரு யானை ஒன்பது காட்டுக்கு சமம் என்று சொல்லப்படுவது உண்டு. யானைகள் வாழும் வனப்பகுதிகள் வளமாக இருக்கும். யானைகளின் எச்சத்தில் எண்ணற்ற விதைகள் இருக்கும். எச்சத்தின் மூலம் காடுகளில் விதைகளை தூவி மரங்களை வளர்க்கும் மகத்தான பணிகளை யானைகள் செய்கின்றன. சூழலியலில் முக்கியத்துவம் வாய்ந்த யானை, சுற்றுச்சூழல் தினத்தில் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யானையை கட்டிய கயிறு அறுந்ததால் பரபரப்பு

அரிக்கொம்பன் யானை ஏற்றப்பட்ட லாரியில் யானை நகராமல் இருக்க குறுக்கே கம்புகள் வைத்ததோடு, கயிறுகளால் கட்டப்பட்டு இருந்தன. தேனியை கடந்து மதுரை சாலையில் குன்னூர் சுங்கச்சாவடி அருகில் சென்றபோது யானையை கட்டி இருந்த கயிறு அறுந்தது. லாரியில் இருந்த பணியாளர்கள் அதை உடனடியாக கவனித்தனர்.

இதையடுத்து லாரி நிறுத்தப்பட்டது. லாரியுடன் கார்களில் சென்ற வனத்துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அறுந்த கயிறு மீண்டும் சீராக கட்டப்பட்டது. அதன்பிறகு லாரி அங்கிருந்து யானையுடன் புறப்பட்டுச் சென்றது. அந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story