ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்பட்டு வருகிறது ஓசூரில், ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேட்டி


ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்பட்டு வருகிறது  ஓசூரில், ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேட்டி
x

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்பட்டு வருகிறது என்று ஓசூரில், ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறினார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் நேற்று பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக வகுப்பறைகளில் மாணவர்கள், ஆசிரியர்களை திட்டுவதும், தாக்குவதும், மிரட்டுவதும் மற்றும் வகுப்பறையில் மது அருந்துவது, போதைப்பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நீதிபோதனை பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். ஓசூர் கெலவரப்பள்ளி அணை மிகவும் பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசி வருகிறது. அணை நீரை தூய்மைபடுத்தி, கெலவரப்பள்ளி அணையை பாதுகாக்க வேண்டும். ஓசூர் பகுதியில் விமான போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாநில , மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தக்கூடாது. தேர்தலை மனதில் வைத்து கர்நாடக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கக்கூடாது. மெட்ரோ ரெயில் சேவையை, பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும். பா.ம.க.வை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஓசூர் பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன், பா.ம.க. வக்கீல்கள் சமூக நீதி பேரவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கதிரவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story