பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி- கலெக்டர் தகவல்


பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி- கலெக்டர் தகவல்
x

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்காசி

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களுக்கு பொருளாதார மேம்பாட்டிற்காக தனிநபர் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற மேற்கண்ட பிரிவினருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.

பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகப்பட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஆகும். பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகப்பட்சம் ரூ.2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு அதிகப்பட்சமாக ரூ.1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகப்பட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும்.

மகளிர் சுயஉதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மகளிர் திட்டம் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகப்பட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகப்பட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையிலும், ஒரு குழுவிற்கு அதிகப்பட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். ஒரு குழுவில் அதிகப்பட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு பயனாளிக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி அல்லது தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பான விவரங்களுக்கு இந்த அலுவலகத்தை 8344280895 என்ற எண்ணில் அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story