ரூ.1.42 கோடியில் எரிவாயு தகன மேடை
தர்மபுரி அரிச்சந்திரன் மயானத்தில் ரூ.1.42 கோடியில் எரிவாயு தகன மேடை அமைக்க நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தர்மபுரி அரிச்சந்திரன் மயானத்தில் ரூ.1.42 கோடியில் எரிவாயு தகன மேடை அமைக்க நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நகராட்சி கூட்டம்
தர்மபுரி நகராட்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா மன்ற கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். பொறியாளர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். வருவாய் ஆய்வாளர் மோகன் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருட்களை வாசித்தார்.
தர்மபுரி நகராட்சி அரிச்சந்திரன் மயான வளாகத்தில் ரூ.1.42 கோடியில் எரிவாயு தகன மேடை அமைப்பது, தர்மபுரி அம்பேத்கர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் பொது சுகாதாரப் பிரிவில் செயல்பட்டு வரும் பேட்டரி வாகனத்திற்கு சார்ஜ் ஏற்றும் நிலையம் அமைப்பது, ரூ.49.30 லட்சம் மதிப்பில் சந்தைப்பேட்டை வாரச்சந்தையை புனரமைக்கும் பணி உள்ளிட்ட 34 பணிகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
சலசலப்பு
கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் மாதேஸ்வரன் பேசுகையில், எங்கள் வார்டுக்குட்பட்ட அரிச்சந்திரன் மயானத்துக்கு செல்லும் வழியில் சிறுபாலம் அமைக்கும் பணி பாதியில் உள்ளதால் கழிவுநீர் தேங்கி வீடுகளுக்குள் செல்லும் நிலை உள்ளது. இந்த பகுதியில் சாலை, சிறுபாலம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளையும் முடிக்கும் வரை அரிச்சந்திரன் மயான வளாகத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க விடமாட்டோம் என்று கூச்சலிட்டார். இந்த பணியை பார்க்க அதிகாரிகள் எல்லோரும் வாருங்கள் என்று கூறி எழுந்து சத்தம் போட்டார். இதனால் மன்ற கூடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் அவரை சமரசம் செய்து அமர வைத்தனர்.
இதைத் தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர் சத்யா, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் செந்தில்வேலன், தண்டபாணி, சத்யா, செல்வி ஆகியோரும் தங்களது வார்டுகளுக்கு தேவையான திட்டப்பணிகளை ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். நகராட்சி நிதிநிலை சரியில்லை. அரசின் நிதி வரப்பெற்ற உடன் வார்டுகளுக்கு தேவையான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி தலைவர் மற்றும் பொறியாளர் தெரிவித்தனர்.