நீதிபோதனை வகுப்பு நிறுத்தப்பட்டதால் குற்றங்கள் அதிகரிக்கிறது;தருமபுரம் ஆதீனம் பேச்சு
நீதிபோதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது என தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
ஆரல்வாய்மொழி,
நீதிபோதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது என தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று குமரி மாவட்டம் வந்தார்.
அங்கு ஆரல்வாய்மொழியில் வடக்கூர் அகலிகை ஊற்று தெருவில் சாமகானப்பிரியன் பேரிகைக்குழு சார்பில் ஆதீன மடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
பின்னர் பக்தர்கள் முன்னிலையில் சமய ெசாற்பொழிவாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீதிபோதனை வகுப்பு நிறுத்தப்பட்டதால்...
மாணவர்கள் நல்ல கல்வியை படிக்க வேண்டும். நீதிபோதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் குற்றங்கள் அதிகரிக்கிறது. குடும்ப நிகழ்வுகளில் சமயத்தை பற்றி சொல்ல வேண்டும். சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். தேவாரம் படிப்பதன் மூலம் வாழக்கையில் தேவையானவற்றை தெரிந்து கொள்ளலாம். மலட்டு பசுவிடம் பால்கரக்க முடியாது. அதுபோலத் தான் கொடுக்க வேண்டாம் என்று இருப்பவனிடம் இருந்து எதையும் பெற முடியாது. இறைவனை நாவாரப்பாடினால் எல்லாம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவிலில் தரிசனம்
முன்னதாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அவர் தரிசனம் செய்தார். மேலும் சைவசித்தாந்த கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து சைவ சித்தாந்தம், தேவாரம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், பத்தர்களுக்கும், கைலாய வாத்தியம் வாசிப்பவர்களுக்கும் ஆசி வழங்கினார்.
இதேபோல் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் சன்னதி தெருவில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில் இருந்து மேளதாளத்துடன் முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக அவர் கோவிலுக்கு சென்றார்.
அங்கு அவரை கோவில் வாசல் முன்பு கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் கணக்கர் கண்ணன் ஆகியோர் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். பின்னர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலயன் சன்னதி, திருவேங்கட விண்ண வரம் பெருமாள் சன்னதி, அறம் வளர்த்த நாயகி அம்மன், நீலகண்ட விநாயகர், கைலாசநாதர், ராமர் சன்னதி, 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர், திருச்சிற்றம்பலம் சபை ஆகிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.