முதல்-அமைச்சரை விமர்சித்தவர் கைது
முதல்-அமைச்சரை விமர்சித்தவர் கைது செய்யப்பட்டார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக 'டுவிட்டரில்' பதிவிட்ட ஸ்டூடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
முதல்-அமைச்சரை விமர்சித்து பதிவு
மயிலாடுதுறை ஆனதாண்டபுரம் சாலையை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 57). இவர், மயிலாடுதுறையில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் சமூக வலைதளமான 'டுவிட்டரில்' தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலரை தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக விஜயராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த முன்னாள் நகரசபை உறுப்பினர் மாசிலாமணி, மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் விஜயராமன் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலரை 'டுவிட்டரில்' தரக்குறைவாக பதிவிட்டு இருந்தது தெரிய வந்தது.
கைது
இதனையடுத்து உயர் பதவிகளில் உள்ளவர்களை தரக்குறைவாகவும், ஆத்திரமூட்டும் வகையிலும், பொது அமைதியை கெடுக்கும் நோக்கத்திலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 8 பிரிவுகளின்கீழ் விஜயராமன் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், விஜயராமனை கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட விஜயராமனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.