தற்காலிக பதவியை வைத்துக்கொண்டு தி.மு.க.வை விமர்சிப்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்-அமைச்சர் கண்டனம்
தற்காலிக பதவியை வைத்துக்கொண்டு தி.மு.க.வை விமர்சிப்பதா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரின் திருமணத்தை மதுரை கலைஞர் அரங்கத்தில் நடத்தி வைத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையில் ஏராளமான சாதனைகளை மூர்த்தி செய்துகாட்டியிருக்கிறார்.
எந்த உறுதிமொழி தந்து ஆட்சிக்கு வந்தோமோ, அந்த உறுதிமொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ, அதைவிட இப்போது நம்பிக்கையாக இருக்கிறார்கள். பல மடங்கு அசைக்க முடியாத நம்பிக்கை நம் மீது ஏற்பட்டிருக்கிறது. இனி எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தான் வெற்றிபெறப்போகிறோம் என்ற நம்பிக்கை நம்மைவிட மக்களுக்கு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு உதாரணமாக, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அதுவும் ஒரு சாட்சியாக அமைந்தது.
இடைவிடாத உழைப்பு
சாலையில் போகும்போது, இருபுறமும் நின்று வரவேற்பதோடு மனுக்களையும் கொடுப்பார்கள். மனுவை பார்த்தால் அப்படியே காரை நிறுத்தச்சொல்வேன். ஒருவர் மனு வைத்திருந்தாலும், அதை வாங்கிக்கொண்டுதான் போவேன். அதுவும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், அவர்களிடத்தில் நானே சென்று, வேனை விட்டு இறங்கி நானே நடந்து போய் அதை வாங்கிக்கொண்டு வருவேன். சாதாரண பேப்பரை வைத்திருப்பார்கள். ஏதோ 'பில்' வைத்திருப்பார்கள். அதை மனு என்று நினைத்து வாங்கிவிட்டேன். இப்படியெல்லாம்கூட நடந்திருக்கிறது. எப்போதுமே மனுவை கொடுக்கிறபோது, ஒரு குறையை சொல்லிக் கொடுப்பார்கள்.அது கடந்த ஆட்சியில்.
இப்போது ஒரு நம்பிக்கையோடு, கொடுக்கும்போதே நன்றி என்கிறார்கள். ஏதோ முடித்துவைத்தது போல நன்றி என்கிறார்கள். சிலபேர் இப்போது, சமீபகாலமாக, "உங்க உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள், உங்க உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லுகிறபோது, மக்கள் என் மீது, இந்த அரசின் மீது, எந்த அளவுக்கு நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்று கண்கூடாக பார்க்கிறேன். அந்த அளவுக்கு இன்றைக்கு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் தொடர்ந்து இடைவிடாமல், நான் மட்டுமல்ல மக்கள் பிரதிநிதிகள் அத்தனை பேருமே உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
விமர்சிக்க தகுதி இருக்கிறதா?
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.வே அவரிடம் பேசுவதில்லை. எங்கள் (தி.மு.க.) எம்.எல்.ஏ. வந்து பேசுகிறார்கள் என்று அவர் 'புரூடா' விட்டுக்கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, சட்டமன்ற தேர்தலில் தோல்வி, உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி. அ.தி.மு.க கட்சி இப்போது பிளவுபட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி என்று 2 அணிகளாக பிளவுபட்டிருக்கிறது. இப்ப அவர் (எடப்பாடி பழனிசாமி) இருக்கும் பதவியே 'டெம்ப்ரவரி' (தற்காலிகமானது) பதவி. இந்த 'டெம்ப்ரவரி' பதவியை வைத்துக்கொண்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதி இருக்கிறதா? நானும் இந்த நாட்டில் இருக்கேன் என்று காட்டிக்கொள்வதற்காகதான், காமெடிக் கதையை எல்லாம் விட்டுக்கொண்டிருக்கிறார்.
நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. என்னை பொறுத்தவரை நான் ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறேன். நல்லது செய்யவே இப்போது நேரமில்லை. இப்படி, கெட்டதை, பொய்யை, திட்டமிட்டு செய்யக்கூடிய பொய்ப்பிரச்சாரத்தைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. அதற்கெல்லாம் நேரமே இல்லை. அதைப் பற்றி, கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. மக்கள் நமக்கு நன்மை செய்ய வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்த நன்மையை மட்டும் செய்வோம். மக்களுக்காக வாழ்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கவர்ந்த நெல்லை சுவரொட்டி
நெல்லையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை குறிப்பிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நெல்லையில், வேனில் போகும்போது, பார்த்த ஒரு சுவரொட்டி என்னை ரொம்பவும் கவர்ந்தது. அது என்னவென்றால், 'ஏ.எம்... பி.எம்... பார்க்காத சி.எம்.', அதாவது காலை, மாலை பார்க்காத முதல்-அமைச்சர் என்று ஒட்டியிருந்தார்கள். அது ஒரு பக்கம். ஆனால் அப்போது நான் நினைத்தது என்னவென்றால், ஏ.எம்., பி.எம். என்பதைவிட, நான் 'எம்.எம்.சி.எம்.' ஆக இருக்க விரும்புகிறேன்.
அப்படி என்றால், 'நிமிடம் முதல் நிமிடம்.' அதான் எம்.எம்., ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்கக்கூடாது என்ற நிலையில் 'எம்.எம்.சி.எம்.' ஆக இருந்து, ''தமிழகத்தை நம்பர்-1'' என்று உருவாக்கவேண்டும் என்ற நிலையில், எங்கள் பணி நடந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மூர்த்திக்கு அமைச்சர் பதவி கொடுத்தது ஏன்?
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
மூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியமைத்த பிறகு அமைச்சர்களாக யார் யாரைப் போடலாம்? என்று நாங்கள் சிந்தித்தோம். கட்சியில் இருக்கக்கூடிய சில முக்கிய நிர்வாகிகளோடு கலந்துபேசினோம். அப்படி பேசிக்கொண்டிருந்தபோது எப்படியாவது தென்பகுதியில், மதுரைக்கு ஒரு முக்கியத்துவம் தரவேண்டும் என்று முடிவுசெய்து, மூர்த்திக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று முடிவுசெய்தோம். ஆனால் எனக்கு ஒரு பயம் வந்தது. ஏனென்றால் அவர் ரொம்ப கோபக்காரர். அப்படிப்பட்டவருக்கு எப்படி தருவது? என்றொரு அச்சம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். அதனால் அவருக்கு தரலாம் என்று முடிவு செய்தோம்.
அப்படி முடிவு செய்த நேரத்தில், எந்த துறையைத் தரலாம், எந்த இலாகாவை அவரிடத்தில் ஒப்படைக்கலாம் என்று யோசித்தபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையை வழங்கலாம் என்று முடிவு செய்து அந்த இலாகா அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அச்சத்தோடுதான் தந்தோம். எனக்கு பயம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அந்த துறையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மூர்த்தியினுடைய செயலைப் பார்த்தபோது, பொறுமையின் சிகரமாகவே மாறிவிட்டார் அவர். என்னுடைய எதிர்பார்ப்பைவிட ரொம்ப சிறப்பாக அரசுக்கு பல்வேறு வகையில் வருவாய் வரக்கூடிய வகையில், பல பணிகளை நிறைவேற்றித் தந்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.