டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து திருச்சியில் 26-ந்தேதி செஞ்சட்டை மாநாடு கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து திருச்சியில் 26-ந்தேதி செஞ்சட்டை மாநாடு நடைபெறும் என கு,பாலசுப்பிரமணியன் கூறினாா்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2003-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் நிர்வாகம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 19 ஆண்டுகளுக்கு மேலாகியும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 30 ஆயிரம் பணியாளர்களின் நலன்கள் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் 480 நாட்கள் வேலை செய்தால் பணி நிரந்தரம், 3 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற எந்த விதியும் பின்பற்றப்படவில்லை. இவர்களுக்கு வழங்கப்பட்ட போனஸ் தொகையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கேட்டால் டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சர் கூறுகிறார்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆய்வு என்ற பெயரில் டாஸ்மாக் பணியாளர்களிடம் பணத்தை அதிகாரிகள் பறிக்கிறார்கள். டாஸ்மாக் நிர்வாகம் பற்றியும், அனுமதியின்றி இயங்கும் பார்கள் பற்றியும் வெள்ளை அறிக்கை கேட்டால், இது வரை அரசு வெளியிடவில்லை.
டாஸ்மாக் நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஆகவே ஒட்டு மொத்த டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து, அரசு பணியாளர் சங்கம் சார்பில் வருகிற 26-ந்தேதி திருச்சியில் செஞ்சட்டை மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கிறது. முன்னதாக 24, 25-ந்தேதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.