குளத்தில் முதலை நடமாட்டம்
குளத்தில் முதலை நடமாட்டம் உள்ளது.
வேதாரண்யம் அருகே குளத்தில் முதலை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்குளத்தில் முதலை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வேம்பத்தேவன் காடு கிராமம் உள்ளது. இங்கு 5 ஏக்கரில் புதுக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேதாரண்யம் தீயணைப்பு படைவீரர்கள் புதுக்குளம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்
விசாரணையில் இந்த குளத்தில் சிலர் திருட்டுத்தனமாக மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியதாகவும் அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்றதாகவும் தகவல் கிடைத்தது.
எச்சரிக்கை
இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளத்தின் அருகே எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதில் புதுக்குளத்தில் முதலை இருப்பதாகவும், பொதுமக்கள் குளத்தில்இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் அயூப்கான் கூறுகையில், 'இந்த பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பது சாத்தியமற்ற ஒன்றாகும். இது வதந்தியாக கூட இருக்கலாம். இருந்தாலும் முதலை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. குளத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.
இந்த நிலையில் நேற்று வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் பாதுகாப்பு சாதனங்களுடன் இறங்கி முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முதலை பிடிபடவில்லை. தொடர்ந்து முதலையை தேடும் பணி நடந்து வருகிறது.