முதுமலை மாயாற்றில் முதலைகள் நடமாட்டம்


முதுமலை மாயாற்றில் முதலைகள் நடமாட்டம்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் உள்ள மாயாற்றில் முதலைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்க கூடாது என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலையில் உள்ள மாயாற்றில் முதலைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்க கூடாது என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

முதலைகள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கூடலூர், நடுவட்டம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து முதுமலை மாயாறு வழியாக பவானிசாகர் அணைக்கு ஆற்றில் தண்ணீர் செல்கிறது. சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் மாயாற்றில் சுற்றுலா பயணிகள் சில சமயங்களில் இறங்கி விளையாடுவது வழக்கம். மேலும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் முக்கிய இடங்களில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மாயாற்றில் இறங்கினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் முதுமலை தெப்பக்காடு, கார்குடி பகுதியில் செல்லும் மாயாற்றில் முதலைகள் நடமாட்டம் தென்பட்டு உள்ளது.

வனத்துறை எச்சரிக்கை

அவை அவ்வப்போது கரையோரத்தில் ஓய்வெடுத்து வருகின்றன. இதை அறியாமல் ஆற்றில் இறங்கும் சுற்றுலா பயணிகளுக்கு முதலைகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது சபரிமலைக்கு அய்யப்பன் கோவிலில் சீசன் நடைபெற்று வருவதால், தினமும் காலையில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் முதுமலை வழியாக நடந்து செல்கின்றனர். அப்போது மாயாற்றில் பக்தர்கள் பலர் இறங்கி குளிக்கின்றனர்.

இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர். எனவே, தடையை மீறி மாயாற்றுக்குள் யாரும் இறங்க கூடாது. இதை கண்காணிக்க ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story