தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.74 கோடி பயிர் காப்பீடு தொகை


தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.74 கோடி பயிர் காப்பீடு தொகை
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.74 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.74 கோடி பயிர் காப்பீடு தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது என்று வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 2020-21-ம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மக்காசோளம் மற்றும் உளுந்து பயிர்களுக்கு ரூ.105 கோடியே 67 லட்சம் காப்பீட்டு தொகையாக ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள பாசிப்பயறு, கம்பு, சோளம், எள், நிலக்கடலை, சூரியகாந்தி, பருதி, நெல்-3 ஆகிய பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.53 கோடியே 99 லட்சம் மற்றும் மிளகாய் பயிருக்கு ரூ.20.04 கோடி ஆக மொத்தம் ரூ.74.03 கோடியை மாநில அரசே முழுமையாக விடுவித்து உள்ளது. இந்த தொகை காப்பீட்டு நிறுவனத்தால் நேற்று முன்தினம் வங்கிக்கு வழங்கப்பட்டு, நேற்று முதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் போதுமான உரங்கள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் கோரிக்கை

தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசுகையில், ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்கள் சாகுபடி செய்யும் போது, அதற்கு ஒருமுறை பெறப்பட்ட அடங்கலை வைத்து கடன் பெற முடியவில்லை. ஆகையால் ஒவ்வொரு பயிர் சாகுபடிக்கும் தனியாக அடங்கல் வழங்க வேண்டும். சாத்தான்குளத்தில் வேளாண் பொறியியல் துறை அலுவலகம் அமைக்க வேண்டும். கோரம்பள்ளம் கூட்டுறவு சங்கத்தில் போதுமான அளவு உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சந்திக்க...

இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, அடங்கல் விவகாரத்தில் விவசாயிகளுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் இ-அடங்கல் முறை விரைவில் அமலுக்கு வருகிறது. விவசாயிகள் ஆன்லைன் மூலம் அடங்லை பெற்றுக் கொள்ளலாம். நிலங்களில் என்ன பயிரிடப்பட்டுள்ளது என்பன போன்ற விவரங்களை கிராம நிர்வாக அதிகாரி பதிவேற்றம் செய்வார். அதனை வருவாய் ஆய்வாளர், மண்டல துணைதாசில்தார், தாசில்தார், உதவி கலெக்டர் ஆகியோர் விவரங்களை சரி பார்க்க முடியும். விவசாயிகளும் விவரங்களை பதிவு செய்யலாம். இந்த முறை விரைவில் அமலுக்கு வரும். இதில் சாகுபடி செய்யும் மாதத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து வேளாண்மை சார்ந்த அலுவலர்களும் தினமும் விவசாயிகளை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கி, அந்த விவரத்தை தங்கள் அலுவலகங்களில் எழுதி வைக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் அதிகாரிகளை சிரமமின்றி சந்தித்து தங்கள் பிரச்சினைகளை பேச வசதியாக இருக்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 120 பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கடன்களை தீர்வு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியாரம்மாள், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துராணி, கூட்டுறவு இணைப் பதிவாளர் முத்துக்குமாரசாமி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story