நடப்பாண்டில் ரூ.200 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு


நடப்பாண்டில் ரூ.200 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.200 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.200 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வார விழா

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ஜீனு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தேசிய அளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பயிர் கடன் மேளா நடத்தப்பட உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயிகளுக்கு நடப்பாண்டு (2022-23) ரூ.200 கோடி அளவில் பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே ஏற்கனவே சங்கத்தில் உள்ள உறுப்பினராக உள்ள விவசாயிகளும், இதுவரை உறுப்பினராக சேராத விவசாயிகளும் உடனடியாக உறுப்பினராக சேர்ந்து பயிர் கடன் பெற்று பயனடையலாம்.

உரம் இருப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டினை மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் பயிர்க்காப்பீட்டு கட்டணத்தை செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம்.

மேலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 840 டன்னும், டி.ஏ.பி. 500 டன்னும், பொட்டாஷ் 283 டன்னும், காம்ப்ளக்ஸ் 787 டன்னும் இருப்பு உள்ளது. எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். கடன் உறுப்பினராக சேருவதற்கு ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். இதேபோல் கடன் பெறுவதற்கு 1432 பசலி அடங்கல், 10 (1) நகல் (பட்டா), ஆதார் நகல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கே.சி.சி. பாஸ்போர்ட் நகல், ஸ்மார்ட் கார்டு நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story