தாயின் கையை உதறிவிட்டு ரோட்டை கடந்த 1-ம் வகுப்பு மாணவன் கார் மோதி பலிபவானி அருகே பரிதாப சம்பவம்


தாயின் கையை உதறிவிட்டு ரோட்டை கடந்த 1-ம் வகுப்பு மாணவன் கார் மோதி பலிபவானி அருகே பரிதாப சம்பவம்
x

தாயின் கையை உதறிவிட்டு ரோட்டை கடந்த 1-ம் வகுப்பு மாணவன் கார் மோதி பலியானான்

ஈரோடு

பவானி அருகே தாயின் கையை உதறிவிட்டு ரோட்டை கடந்த மாணவன் கார் மோதி பரிதாபமாக இறந்தான்.

1-ம் வகுப்பு மாணவன்

பவானி அருகே உள்ள சித்தோடு நசியனூர் கதிரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. கட்டிட தொழிலாளி. தற்போது பச்சைப்பாளி கன்னிமார் கரடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய மகன்கள் சுனீஷ் (வயது 12). அரீஷ் (7). சுனீஷ் கதிரம்பட்டியில் உள்ள கார்த்தியின் தாய் வீட்டில் தங்கிக்கொண்டு 7-ம் வகுப்பு படித்து வருகிறான். அரீஷ் கன்னிமார் கரடு அருகே உள்ள சாணார்பாளையம் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கார்த்தியின் தம்பி மகன் சரவணன் என்ற சிறுவனும் சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்தான்.

சாலையை கடக்க ஓட்டம்

இந்தநிலையில் விஜயலட்சுமிக்கு நேற்று காலை கையில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சித்தோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். தன்னுடன் சுனீஷ், அரீஷ், சரவணன் ஆகியோரையும் அழைத்து சென்றார்.

சிகிச்சை பெற்றதும் 3 பேரையும் அழைத்துக்கொண்டு விஜயலட்சுமி நடந்தே வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார்.

அப்போது கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அதுவரை விஜயலட்சுமியின் கையை பிடித்துக் கொண்டு வந்த அரீஷ் திடீரென உதறிவிட்டு வேகமாக ஓடி சாலையை கடக்க முயன்றான்.

கார் மோதி பலி

அந்த நேரம் சேலம் நோக்கி வேகமாக வந்த கார் சிறுவன் அரீஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அரீஷ் படுகாயமடைந்தான். இதைப்பார்த்த விஜயலட்சுமி அலறி துடித்தபடி மகனிடம் ஓடிவந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் அரீஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருைகயா வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தார்.

தாயின் கையை உதறிவிட்டு ஓடி காரில் அடிபட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story