பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரியில் ஜவுளிகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்-பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரியில் ஜவுளிகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்-பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி நகரில் ஜவுளிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (சனிக்கிழமை) போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சூரியன் பொங்கல் விழாவாகவும், வருகிற 16-ந் தேதி மாட்டு பொங்கல் விழாவாகவும், 17-ந் தேதி காணும் பொங்கல் விழாவாகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

கடந்த 2 ஆண்டுகள் கொரோனா வைரஸ் தொற்றால் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. இந்த ஆண்டு தொற்று குறைந்த நிலையில் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

பரிசு தொகுப்பு

இந்தநிலையில் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கருப்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த பணிகள் கடந்த 9-ந் தேதி தொடங்கப்பட்டதை தொடர்ந்து, கிராமங்கள் தோறும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளது.

மேலும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்கி உள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கும் அந்தந்த நிறுவனங்கள் பொங்கல் போனஸ் வழங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை வரவேற்க தயாராக வருகிறார்கள்.

அலைமோதிய மக்கள் கூட்டம்

இதனிடையே தர்மபுரி நகரில் பொதுமக்கள் ஜவுளிகள் வாங்க கடைகளுக்கு படை எடுத்துள்ளனர். சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை தேர்வு செய்து, வாங்கினர்.

மேலும் ஜவுளிக்கடைகளில் பல்வேறு டிசைன்களில் புதிய ரக ஆடைகளும் குவிக்கப்பட்டு இருந்தன. அவற்றை பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கினர். கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் இரு சக்கர வாகனங்கள், கார்களில் தர்மபுரிக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போலீசார் கண்காணிப்பு

இதனால் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆலோசனைப்படி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஷ், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி மற்றும் ஏராளமான போலீசார் தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் நகரின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்த போலீசார் சிறப்பு ஏற்பாடு செய்தனர்.

இதேபோன்று முக்கிய நகரங்களான பாலக்கோடு, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் ஜவுளிகள் வாங்க கடைகளில் குவிந்தனர். இதனால் அந்த பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story