திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x

விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் பொதுவழியில் பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். முன்னதாக மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் அவதி

மலைக்கோவிலில் சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மலைக்கோவில் வாகன நிறுத்துமிடம், மலைக்கோவில் பின்புறம் ஆகிய இடங்களில் கோவில் நிர்வாகம் இலவச கழிவறைகளை கட்டியுள்ளது. ஆனால் நேற்று கழிவறையில் தண்ணீர் இல்லாததால் கோவிலுக்கு வந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனால் கோவில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபங்களின் உரிமையாளர்கள் கழிவறை பயன்படுத்துவதற்கு பக்தர்களிடம் ரூ.30 முதல் 50 வரை வசூல் செய்தனர். அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் முருகன் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முடிகாணிக்கை

அதேபோல் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்த வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் சரவண பொய்கை திருக்குளம் மற்றும் மலைக்கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள முடிகாணிக்கை செலுத்தும் மையங்களில் பக்தர்களுக்கு இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது.

இதற்காக கணினி மூலம் ரசீது வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த மையங்களில் கடந்த சில நாட்களாக சர்வர் பழுது காரணமாக ரசீது வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் மையங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் அவதிப்படுகின்றனர். கோவில் நிர்வாகம் உடனடியாக தலைமுடி காணிக்கை செலுத்தும் மையங்களில் சர்வர் பழுது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமெனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story