தர்மபுரி பஸ் நிலையத்தில் அலைமோதிய மக்கள்
தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் ஆயுத பூஜை, காலாண்டு விடுமுறை முடித்து வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் ஆயுத பூஜை, காலாண்டு விடுமுறை முடித்து வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
விடுமுறை நாட்கள்
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறைக்காக வெளியூர்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிற மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏராளமானோர் சென்று இருந்தனர்.
இந்த நிலையில் பண்டிகை, காலாண்டு விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் வெளியூர் செல்வதற்காக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் நேற்று காலை முதல் இரவு வரை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அவ்வப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே பஸ்களில் ஏறி வெளியூர்களுக்கு சென்றனர்.
தர்மபுரி பஸ் நிலையம்
தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை முதல் இரவு வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னை, பெங்களூரு, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடும்பம் குடும்பமாக சென்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான பென்னாகரம், அரூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பஸ் நிலையங்களிலும் வெளியூர் செல்ல பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.