பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்


பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:47 PM GMT)

திருவாரூர் கடைவீதியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருவாரூர்

திருவாரூர் கடைவீதியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. .

தமிழர் திருநாள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது வீட்டின் முன்பு புது மண்அடுப்பு வைத்து, புதிய மண்பானையில் பச்சரிசி கொண்டு பொங்கல் வைப்பார்கள்.

அதிலும், புதிய பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொங்கல் பொங்கி வரும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பொங்கலோ! பொங்கல்! என கூறி மகிழ்ச்சியை வெளிபடுத்துவர். இதனையடுத்து பொங்கிய பொங்கலை சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து வழிபடுவார்கள். பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

மக்கள் கூட்டம் அலைமோதியது

திருவாரூர் கடைவீதியில் கடந்த 3 நாட்களாக பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் போதிய விற்பனை இன்றி வியாபாரிகள் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் திருவாரூர் கடை வீதிகளில் நேற்று பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடை வீதிகளில் இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகங்களை போக்குவரத்து போலீசார் அனுமதிக்கவில்லை.

கரும்பு, மண் பானை, மண் அடுப்பு, மஞ்சள் கொத்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

மேலும் புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வாங்க சரக்கு ஆட்டோக்களில் வந்தவர்கள் கட்டு, கட்டாக கரும்புகளை வாங்கிச் சென்றனர்.

தற்காலிக கடைகள்

திருவாரூரில் கும்பகோணம் சாலை, மயிலாடுதுறை சாலை, 4 வீதிகள், நேதாஜி சாலை, பனகல் சாலை, புதிய பஸ் நிலையம் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் கரும்புக் கட்டுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. கடைவீதி பகுதிகளில் ஏராளமான கோலப்பொடி, பூஜைக்கு தேவையான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஜவுளி கடைகளிலும் புத்தாடை வாங்குவதற்காக வந்த பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைத்து ஜவுளி கடைகளிலும் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை உள்ளிட்டவைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்

பொங்கல் பண்டிகைக்காக வெளியூரிகளில் வேலைபார்த்து வருபவர்கள் பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் வந்தனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.


Next Story