பொங்கலையொட்டி கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்


பொங்கலையொட்டி கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
x

பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க வேலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

வேலூர்

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாள் என்று அனைவராலும் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் கடந்த 2 நாட்களாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு காய்கறிகள் முக்கிய பங்கு வகிப்பது போன்று கரும்பும், மஞ்சள் குலையும் முக்கியமான இடத்தை பிடிப்பதாக உள்ளது.

வேலூர் கிருபானந்தவாரியார் சாலை, லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் போன்ற இடங்களில் மஞ்சள் குலைகள், பனங்கிழங்கு போன்றவைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே வரத்தொடங்கி விட்டன.

சேலம், கடலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து கரும்புகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. வேலூர் பெரியார் பூங்கா அருகே கரும்புகள் லாரிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டன.

மக்கள் கூட்டம்

20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஜோடி கரும்பு ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனினும் கரும்பு எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதுபோல மஞ்சள் குலை ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் பலர் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் லாங்குபஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் அதிகளவிலான மக்கள் கூட்டம் இருந்தது.

பொங்கல் வைப்பதற்காக பானைகளும் விற்பனை செய்யப்பட்டன. வண்ணம் பூசப்பட்ட பானைகள் அளவுக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. வண்ணம் பூசப்படாத பானைகள் ரூ.50 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று துணிகளை வாங்கினர். இதனால் சில இடங்களில் மாலை வேளையில் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேக்குவரத்து நெரிசல்

புதிய பஸ் நிலையம் கிரீன்சர்க்கிள் முதல் பாகாயம் வரையிலான காட்பாடி சாலை, அண்ணாசாலை, பெங்களூரு சாலை, ஆரணி சாலை, தொரப்பாடி சாலை, பில்டர்பெட் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் அதிகப்படியான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பண்டிகை அன்று வீட்டின் முன்பு பெண்கள் கோலம் போடுவதற்காக வசண்ண கலரிலான கோல பொடிகளை வாங்கிச்சென்றனர். இதனையொட்டி பஸ் நிலையம் முதல் பல்வேறு இடங்களில் ஏராளமான கடைகள் முளைத்திருந்தன.


Next Story