சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது:போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடிய ஏற்காடு-சேலத்துக்கு வர 3 மணி நேரம் ஆனது
சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசலில் ஏற்காடு திக்குமுக்காடி போனது.
ஏழைகளின் ஊட்டி
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். தமிழகம் மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.
அப்படி வந்த அவர்கள் சேர்வராயன் கோவில், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், படகு இல்லம், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர். ஏற்காட்டில் நேற்று வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. அப்படி இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படகு இல்லத்தில் குவிந்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து அவர்கள் படகு சவாரி செய்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். போக்குவரத்து நெரிசல், சுற்றுலா பயணிகள் கூட்டம் என நேற்று ஏற்காடு திக்குமுக்காடி போனது. இதனால் ஏற்காட்டில் இருந்து சேலத்துக்கு வர 3 மணி நேரத்துக்கும் மேலானது.