மாகாளியம்மன் கோவிலில் தாலி, வெள்ளிக்கிரீடம் கொள்ளை


மாகாளியம்மன் கோவிலில் தாலி, வெள்ளிக்கிரீடம் கொள்ளை
x

மாகாளியம்மன் கோவிலில் தாலி, வெள்ளிக்கிரீடம் கொள்ளை

திருப்பூர்

நல்லூர்

திருப்பூரில் மாகாளியம்மன் கோவிலில் தாலி, வெள்ளிக்கிரீடம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாகாளியம்மன் கோவில்

திருப்பூர் செவந்தாம்பாளையம் தெற்கு தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் மாகாளியம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பூஜை செய்து விட்டு கோவிலை பூசாரி பூட்டி சென்றுள்ளார்.

பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கோவில் பூசாரி கோவிலை திறந்து பூஜை செய்ய உள்ளே சென்றார். அப்போது பூஜை பொருட்கள் வைக்கும் அறையின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தாலி, சங்கிலி என 7½ பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மர்ம ஆசாமி கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கும், நல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மர்ம ஆசாமி ஒருவர் சுவர் ஏறி குதித்து கோவில் வளாகத்திற்குள் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆசாமியின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வாலிபர் கைது

அப்போது அந்த பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர் சில்லறை காசுகளை எண்ணிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ரோணி (வயது 20) என தெரியவந்தது. இவர் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் செவந்தாம்பாளையம் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் உள்ள ஜீவா நகரில் வசித்து வந்ததும், கோவிலில் திருடிய நகை மற்றும் வெள்ளி ெபாருட்களை தலையணைக்குள் மறைத்து வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரோணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 வெள்ளி கிரீடம், 1 தாலி, 3 செயின், தாலியில் கோர்க்கும் காசு, வெள்ளி செயின் 2, என 7½ பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கோவிலில் பொருட்கள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story