சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் தீக்குளிப்பு


சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் தீக்குளிப்பு
x

வாலாஜா பேட்டையில் சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற மகளுக்கும் காயம் ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

வாலாஜா பேட்டையில் சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற மகளுக்கும் காயம் ஏற்பட்டது.

சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர்

வாலாஜாபேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ஏழுமலை (வயது 55). இவர் சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவரது மனைவி வனஜா (50), இவர் வாலாஜாவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு சண்முக பிரியா (23), தீபிகா (20), பிரதிஷ்கா (18) என மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் சண்முக பிரியாவுக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இன்னொரு மகள் தீபிகா சென்னையில் நர்சிங் படித்து வருகிறார். பிரதீஷ்கா வாலாஜாவில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறாள்.

தீக்குளிப்பு

இந்த நிலையில் ஏழுமலை, சண்முகப்பிரியா ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ஏழுமலை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென அவர் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஏழுமலை உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதைக்கண்ட சண்முகப்பிரியா ஓடிச்சென்று தந்தையை காப்பாற்ற முயன்று உள்ளார். அப்போது அவர் மீதும் தீப்பட்டு காயமடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சென்று அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து சண்முகப்பிரியா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story