கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல் காலாண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்தும், தவறாக கருதப்படும் வழக்குகளின் விசாரணைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
விரைந்து முடிக்க வேண்டும்
தற்போது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத வழக்குகள், நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகள், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்து கலெக்டர் ஷ்ரவன் குமார் கேட்டறிந்தார். தொடர்ந்து, வழக்குகளின் விசாரணைகளை விரைவாக முடிக்க வேண்டும். மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு தீருதவி தொகை (2022-2023) நிதியாண்டில் 194 பேருக்கு மொத்தம் 1 கோடியே 28 லட்சத்து 96 ஆயிரத்து 250 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு
சங்கராபுரம் தாலுகா கடுவனூர் காலனியை சேர்ந்த சங்கர் வன்கொடுமையால் மரணமடைந்ததை தொடர்ந்து அவருடைய மனைவி ஜோதி க்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 7 பேரின் வாரிசுகளுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீருதவி விரைவில் கிடைத்திடும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுப்பிட வேண்டும் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தினார்.
அதேபோன்று, எதிர்வரும் நாட்களில் வன்கொடுமைகள் நடைபெறாமல் கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட தொடர்புடைய அலுவலர்கள், காவல் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கோட்டாட்சியர்கள் பவித்ரா, யோகஜோதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், மகேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், அரசு சிறப்பு வழக்கறிஞர் கோதண்டபாணி மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.