பூச்சி தாக்குதலால் வெள்ளரி விவசாயம் பாதிப்பு


பூச்சி தாக்குதலால் வெள்ளரி விவசாயம் பாதிப்பு
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் பகுதியில் வெள்ளரி சாகுபடி விவசாயம் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பகுதியில் வெள்ளரி சாகுபடி விவசாயம் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வெள்ளரி சாகுபடி

தமிழகம் முழுவதும் தற்போது கோடைவெயில் வாட்டி வதைத்து வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் கடந்த ஆண்டை காட்டிலும் வெயில் அதிகமாகவே உள்ளது. ஆண்டுதோறும் கோடைகால சீசனில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய், அம்மன் கோவில் உள்ளிட்ட சில கிராமங்களில் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி விவசாயத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த ஆண்டு சக்கரக்கோட்டை கண்மாயில் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வரத்தால் தண்ணீர் உள்ளது. இதனால் கண்மாயில் இந்த ஆண்டு வெள்ளரி சாகுபடி விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் அம்மன் கோவில், ஆர்.எஸ்.மடை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பூச்சி தாக்குதல்

இந்த ஆண்டு பூச்சி தாக்குதலால் வெள்ளரிப்பிஞ்சு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி கூறும்போது:- 40 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளரி விவசாயம் செய்து வருகின்றேன். கடந்த ஆண்டு வெள்ளரிப்பிஞ்சு விளைச்சல் நன்றாக இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு சக்கரக்கோட்டை கண்மாயில் தண்ணீர் அதிகம் இருந்தும் வெள்ளரி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு கொண்டு வரக்கூடிய தண்ணீர் பாதை அடைக்கப்பட்டு விட்டதால் வெள்ளரி செடிகளுக்கு சரியான அளவு தண்ணீர் இல்லாமல் செடிகள் காய்ந்து வருகின்றன.

பாதிப்பு

அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு பூச்சி தாக்குதல் அதிகம் இருப்பதால் வெள்ளரிப்பிஞ்சு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 3 ஏக்கரில் வெள்ளரி பிஞ்சு விவசாயம் செய்துள்ளேன். கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்ததுடன் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் வருமானம் கிடைத்தது.

ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமலும், பூச்சி தாக்குதலாலும் வெள்ளரி பிஞ்சு விளைச்சல் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story