கடலூர் மத்திய சிறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: பிரபல ரவுடியின் தம்பி உள்பட 2 பேர் கைது


கடலூர் மத்திய சிறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு:  பிரபல ரவுடியின் தம்பி உள்பட 2 பேர் கைது
x

கடலூா் மத்திய சிறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடியின் தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவர் கடலூர் மத்திய சிறையில் உதவி சிறை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் குடும்பத்துடன் மத்திய சிறை அருகே உள்ள உதவி சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த 24-ந் தேதி மணிகண்டன் மட்டும் கும்பகோணம் சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த 28-ந்தேதி அதிகாலை அவரது வீட்டின் ஜன்னல் வழியாக மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தில் மணிகண்டன் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிறை அதிகாரியின் வீட்டுக்கு தீ வைத்தவர்களை பிடிக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

சதித்திட்டம்

இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மத்திய சிறை காவலராக இருக்கும் சேலம் மாவட்டம் வாழப்பாடி சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (44), முன்விரோதம் காரணமாக மணிகண்டனை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட முடிவு செய்து, சிறையில் இருக்கும் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் மூலம் சதித்திட்டம் தீட்டி சென்னை திருநீலகண்ட நகரை சேர்ந்த தினேஷ் (23) உள்ளிட்ட 7 பேருடன் சேர்ந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து செந்தில்குமார், தினேஷ் ஆகியோரை முதுநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த தனசேகரின் தம்பி மதிவாணன், அவரது நண்பர் மவுலிதரன் உள்ளிட்ட 6 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்நிலையில் மதிவாணன் (23), மவுலிதரன் (26) ஆகியோர் தங்கள் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அதிகாலை திருவெறும்பூர் சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கி இருந்த மதிவாணன், மவுலிதரன் ஆகியோரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story