சொத்து வரி கட்டாததால் மளிகை கடைக்கு சீல் வைக்க முயன்ற கடலூர் மாநகராட்சி அலுவலர்கள்உரிமையாளர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
சொத்து வரி கட்டாததால் மளிகை கடைக்கு கடலூர் மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைக்க முயன்றனா்.
கடலூர் ஆல்பேட்டை மெயின்ரோட்டில் உள்ள ஒரு மளிகைக்கடைக்காரர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியான ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 618 கட்டாமல் பாக்கி வைத்திருந்தார். இது பற்றி அவரிடம் பல முறை மாநகராட்சி அதிகாரிகள் வரி கட்ட கூறியும், அவர் செலுத்தவில்லை. இதனால் அவரது கடைக்கு நேற்று மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான அலுவலர்கள் சென்று, அந்த கடையில் இறுதி நோட்டீசு ஒட்டினர். பின்னர் அந்த மளிகை கடையை சீல் வைக்க முயன்றனர்.
இதை பார்த்த கடையின் உரிமையாளர், மாநகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் மாநகராட்சி அலுவலர்கள் பாக்கியை செலுத்தாவிட்டால் கடைக்கு சீல் வைத்து, நடவடிக்கை எடுப்போம் என்றனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முதல் கட்டமாக ரூ.75 ஆயிரத்தை கட்டினார். இதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் கடைக்கு சீல் வைக்காமல் சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.