நெய்வேலி நிலக்கரிச்சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ள பணிகளை கைவிடவேண்டும்
நெய்வேலி நிலக்கரிச்சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ள பணிகளை கைவிடவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் கத்தாழை பகுதியில் நெய்வேலி நிலக்கரிச்சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிக்கை நோட்டீஸ் ஒட்டச்சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
கம்மாபுரம், கத்தாழை பகுதிகளில் உள்ள நிலங்களை அளப்பதற்காகவும், அறிவிக்கை ஒட்டுவதற்காகவும் வாரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் படையெடுப்பது வாடிக்கையாகி விட்டது. அதனால், அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் ஒவ்வொரு நாளும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
நிலக்கரிச்சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் தரக்கூடியவை. அவை கையகப்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்நாட்டு அகதிகளாக அவதிப்பட வேண்டியிருக்கும்.
காவிரி பாசனப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அதே நீதி கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கப்படவேண்டும். கடலூர் மாவட்டத்தின் எந்தப்பகுதியிலும் நிலக்கரிச்சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தமாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ள அனைத்து பணிகளையும் கைவிட அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.