கடலூா் மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக பலத்த மழை


கடலூா் மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக பலத்த மழை
x

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதில் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர்

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கடலூரில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்காலிக உழவர் சந்தை செயல்பட்டு வரும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மழைநீர் அதிகளவு தேங்கி நிற்பதால், அங்கு கடை வைத்து வியாபாரம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெற்பயிர்கள் சாய்ந்தன

இதேபோல் விருத்தாசலம் பகுதியிலும் நள்ளிரவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் விருத்தாசலம் பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் கழிவுநீர் கால்வாய்களில் குப்பை கழிவுகள் தேங்கி கிடந்ததால் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் உழவர் சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்கியது. இதனை வெளியேற்றும் பணியில் அங்கிருந்த ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் கோமங்கலம், மருங்கூர், பவழங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழையால் விளைநிலத்திலேயே சாய்ந்து விழுந்தன. மேலும் விளை நிலங்கள் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால், நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணத்தில் பெலாந்துறை வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக பிரியும் கிளை வாய்க்கால் அமைந்துள்ள மேல்புளியங்குடி பகுதியில் புதிய பாலம் கட்டும் பணிக்காக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்காலிக மாற்றுப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சாலை துண்டானது. இதனால் விருத்தாசலம்-ஸ்ரீமுஷ்ணம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதேபோல் வேப்பூர், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, பண்ருட்டி, சிதம்பரம் உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வேப்பூரில் 110 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக வானமாதேவியில் 5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

மின் சாதன பொருட்கள் சேதம்

ராமநத்தம் அடுத்த வெங்கனூரில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இடி விழுந்ததில் இளங்கோவன், அண்ணாதுரை, சின்னசாமி ஆகிய 3 பேரின் வீடுகளில் இருந்த டி.வி., குளிர்சாதன பெட்டி, மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அனைத்தும் கருகி சேதமானது. மேலும் 3 பேர் வீடுகளின் சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்துள்ளது.


Next Story