தமிழகத்தின் வரைபடத்தில் இருந்து கடலூர் மாவட்டம் இல்லாத நிலை ஏற்படும் - கே.பாலகிருஷ்ணன் பேட்டி


தமிழகத்தின் வரைபடத்தில் இருந்து கடலூர் மாவட்டம் இல்லாத நிலை ஏற்படும் - கே.பாலகிருஷ்ணன் பேட்டி
x

என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை எடுத்துக் கொண்டே போனால் தமிழகத்தின் வரைபடத்தில் இருந்து கடலூர் மாவட்டம் இல்லாத நிலை ஏற்படும் என்று கம்மாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கடலூர்

கம்மாபுரம்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு ஏற்கனவே நிலம், கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு, மாற்று இடத்திற்கான பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், 3-வது சுரங்கத்திற்கு விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலத்தை கையகப்படுத்தக்கூடாது, புதிதாக நிலம் கையகப்படுத்தும்போது, இன்றைய சந்தைய மதிப்பில் 4 மடங்கு அல்லது ஒரு கோடி இவற்றில் எது அதிகமோ அவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு ஆறுமுகம், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் வட்ட செயலாளர் அசோகன், மாவட்டக்குழு கலைச்செல்வன், ஓட்டிமேடு, கத்தாழை, மும்முடிசோழகன், கருவெட்டி, வளைமாதேவி, ஊ.ஆதனூர், வி.சாத்தப்பாடி உள்ளிட்ட 26 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாக்குறுதியை நிறைவேற்றாது

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1, 2-க்கு ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, என்.எல்.சி. நிறுவனம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்த விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாகத்தான் நடந்துகொண்டு வருகிறது.

26 கிராமங்களும், முப்போகம் விளையக்கூடிய பாசன வசதி கூடிய நிலங்களாக இருக்கின்ற சூழ்நிலையில் 3-வது சுரங்கத்திற்கு நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று கிராம மக்கள் உறுதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்று சொன்னால் என்.எல்.சி. நிர்வாகம் எந்த வாக்குறுதியை கொடுத்தாலும் அதை நிறைவேற்றாது, நஷ்ட ஈடும் கிடைக்காது.

போராட்டத்தை நடத்துவோம்

என்.எல்.சி. நிறுவனம், விரிவாக்கம் என்கிற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை எடுத்துக் கொண்டே போனால் கடலூர் மாவட்டம் தமிழகத்தின் வரைபடத்தில் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். இந்த மாவட்ட மக்கள் பல மாவட்டங்களுக்கு சென்று அகதிகளாக குடியேறுகிற நிலைதான் ஏற்படும்‌. என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்ததற்காக கடலூர் மாவட்ட விவசாயிகள் மாபெரும் இழப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

என்.எல்.சி. வேலை வாய்ப்புகளை கடலூர் மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் என்.எல்.சி. நிறுவனம் ஆண்டுக்கு 2 சதவீத சி.எஸ்.ஆர். நிதியை கூட கடலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கவில்லை‌. எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாவட்டம் முழுவதும் இருக்கிற மக்களை திரட்டி ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம், மேலும் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து என்.எல்.சி. பிரச்சினைக்கு தீர்வு காண வற்புறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story