கடலூர் மாவட்ட நீதிமன்றம் - காவல்துறையினருக்கான கலந்தாய்வு கூட்டம் நீதிபதிகள், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
கடலூர் மாவட்ட நீதிமன்றம் - காவல்துறையினருக்கான கலந்தாய்வு கூட்டத்தில் நீதிபதிகள், போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டனா்.
கடலூர் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல்துறையினருக்கான ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட நீதிமன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில் கடலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்குகளை முடிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றங்களில் நடக்கும் குற்ற வழக்குகளில் விசாரணைக்கு சாட்சிகளை துரிதமாக ஆஜர்படுத்தி வழக்குகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவியல் நீதித்துறை நீதிபதிகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், அரசு வக்கீல்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி நன்னடத்தை அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.