கடலூா் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் சிறுவர்களை பணியமர்த்தினால் கடும் நடவடிக்கை உரிமையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை
கடலூா் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் சிறுவர்களை பணியமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உரிமையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர், திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி கடலூர் அடுத்த ராமாபுரம், பெரிய காரைக்காடு உள்ளிட்ட பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் கடலூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் பர்வதம் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் குமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர் 1-ம் வட்டம் பழனிவேல், 2-ம் வட்டம் பிரபாகரன் மற்றும் சைல்டு லைன் உறுப்பினர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் பணிபுரிகிறார்களா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்றும், மீறினால் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உரிமையாளர்களக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் பட்டாசு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசு பெட்டிகளின் மீது ''குழந்தை தொழிலாளர்கள் எவரும் பணியமர்த்தப்படவில்லை'' என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.