சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் கடலூர் அரசு ஆஸ்பத்திரி துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதி


சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் கடலூர் அரசு ஆஸ்பத்திரி  துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு ஆஸ்பத்திரி சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. இதனால் அங்கு வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கடலூர்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். ஆஸ்பத்திரியில் உள்ள அறைகள் மற்றும் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க நூற்றுக்கும் மேற்பட்டோர் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆஸ்பத்திரியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. குறிப்பாக குழந்தைகள் வார்டு, மகப்பேறு வார்டுக்குள் சென்றாலே கடும் துர்நாற்றம் தான் வீசுகிறது. அங்குள்ள கழிவறைகள் மற்றும் வளாகத்தை முறையாக சுத்தம் செய்வதில்லை. இதனால் வீசும் துர்நாற்றத்தால், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

வழிந்தோடும் கழிவுநீர்

இதேபோல் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவறை சுகாதார சீர்கேட்டின் பிறப்பிடமாக உள்ளது. ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், இந்த கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். ஒரு சிலர் மட்டும் வேறு வழியின்றி அவசர கதியாக மூக்கை பிடித்துக் கொண்டு உள்ளே சென்று வருகின்றனர். அந்த அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதன் அருகிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், நடந்து செல்லும் பாதையில் கழிவுநீர் ஆறாக வழிந்தோடுகிறது.

இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களை அழைத்து வரும் குடும்பத்தினர் அந்த கழிவறை இருக்கும் பக்கமே செல்ல தயங்குகின்றனர். மேலும் மகப்பேறு பிரிவு கட்டிடம் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியும் நிரம்பி, கழிவுநீர் வழிந்தோடுகிறது. அதாவது கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகமே சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது.

மாவட்டத்தின் தலைமை ஆஸ்பத்திரிக்கே இந்த நிலை என்றால், மாவட்டத்தில் உள்ள பிற அரசு ஆஸ்பத்திரிகள் பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு சுகாதார சீர்கேட்டின் புகலிடமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரியாக இருப்பதால் என்னவோ, துப்புரவு பணியாளர்களும் சரிவர வேலை செய்வதில்லை. ஆகவே மாவட்டத்திற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் கழிவுநீர் வழிந்தோடுவதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, வளாகம் முழுவதையும் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story